சென்னை காவல் துறையின் சார்பாக வாகனங்களை நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதோடு மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது
சென்னையில் வாகனங்களில் பொருத்தப்படும் நம்பர் பிளேட்டுகளில் சரியான விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை என பல புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வு கண்டறிய சென்னை காவல் துறை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நம்பர் பிளேட்டுகளில் இருக்கும் எழுத்தின் வடிவங்கள் எந்தெந்த வாகனங்களில் எப்படி இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 70 சிசி திறன் கொண்டிருக்கும் இன்ஜின் உள்ள இரண்டு சக்கர வாகனங்களில் முன்னால் இருக்கும் நம்பர் பிளேட்டில் 15 மில்லி மீட்டர் உயரத்தில், 1.2 மில்லி மீட்டர் தடிமனாக, 2.5 மில்லி மீட்டர் இடைவெளியும் இருக்க வேண்டும். அதே போன்று பின்னால் இருக்கும் நம்பர் பிளேட்டில் 35 மில்லி மீட்டர் உயரத்திலும், 7 மில்லி மீட்டர் தடிமனாகவும், 5 மில்லி மீட்டர் இடைவெளி விட்டும் அமையப் பெற்றிருக்க வேண்டும்.
மூன்று சக்கர வாகனங்களில் 40 மில்லி மீட்டர் உயரமாகவும், 7 மில்லி மீட்டர் தடிமனாகவும், 5 மில்லி மீட்டர் இடைவெளி விட்டும் எழுத்துக்கள் அமையப் பெற்றிருக்க வேண்டும். மூன்று சக்கர வாகனங்களில் 500cc க்கும் குறைவான இன்ஜின் பொருத்தப்பட்டு இருந்தால் 35 மில்லி மீட்டர் உயரமாகவும், 7 மில்லி மீட்டர் தடிமனாகவும், 5 மில்லி மீட்டர் இடைவெளி விட்டும் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.
மற்ற வாகனங்களில் 65 மில்லி மீட்டர் உயரமாகவும், 10 மில்லிமீட்டர் தடிமனாகவும், 10 மில்லி மீட்டர் இடைவெளி விட்டும் அமைந்திருக்க வேண்டும். அதோடு தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும் அதிலிருக்கும் எழுத்துக்கள் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். வர்த்தகம் தொடர்பான வாகனங்களில் மஞ்சள் நிறத்தில் நம்பர் பிளேட்டும் கருப்பு நிறத்தில் எழுத்துக்களும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.