கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் துணை கலெக்டர் உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை கலெக்டராக பணிபுரிபவர் ராஜமணி. இவர் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார். சங்கராபுரத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு வழங்கிய காரில் துணை கலெக்டர் ராஜாமணி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சங்கராபுரம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கார் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. இந்த விபத்தில் காரில் பயணித்த துணை கலெக்டர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதன்பின் உயிரிழந்த துணை கலெக்டர் ராஜாமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.