விருத்தாச்சலம் அருகே 3 வயது குழந்தை பைக் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகர் கிராமம் அருகே நேற்று இரவு கோவிந்தராஜ் என்ற விவசாயியின் மகள் மலர்விழி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்.. அந்த சமயத்தில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று அந்த குழந்தை மீது மோதி தரதரவென இழுத்துச் சென்றுள்ளது.. இதனால் அந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து வாகனம் ஓட்டி வந்தவரை பிடித்து அங்கிருந்த மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் மங்கலம்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், பைக் ஓட்டி வந்தது 13 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.. அவன் 8ஆம் வகுப்பு அதே கிராமத்தில் படித்து வருவதாகவும், சிவகுரு என்பவரின் மகன் என்பது தெரிய வந்தது..
இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.. 13 வயது சிறுவன் வாகனம் ஓட்ட தகுதி இல்லாதவன், ஓட்டுனர் உரிமம் இல்லை.. உயிரிழப்பு ஏற்படுத்த வாய்ப்பு இருந்தும் சிவகுரு இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பி வைத்ததால் போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.. சிறுவனை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தந்தையை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவர்களிடம் பெற்றோர்கள் வாகனத்தை கொடுக்கக் கூடாது, கொடுத்தால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்.. எனவே பெற்றோர்கள் தங்களது சிறு பிள்ளைகளிடம் இரு சக்கர வாகனத்தை கொடுத்து ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.