லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி கடந்த 4ஆம் தேதி இரவு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை திருச்சி மாவட்டம் துறையூரில் வசித்து வந்த 30 வயதுடைய குணசேகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அச்சமயம் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் ரோட்டில் லாரி வந்து கொண்டிருந்தபோது எதிரே திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து சாலையை கடக்க முயன்ற போது நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக லாரியின் மீது மோதியது.
இந்த விபத்தில் கீழே விழுந்த லாரி ஓட்டுநரான குணசேகரன் மீது லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்தவர்களான திருவண்ணாமலையில் வசித்து வரும் 46 வயதுடைய வேணு, பண்ருட்டி காடாம்புலியூர் ஊரை சேர்ந்த 40 வயது ரமேஷ், சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 38 வயதுடைய ராஜேஷ், 21 வயதுடைய நசிலன், 21 வயதுடைய புவனேஸ்வரி ஆகியோர் காயமடைந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து விழுப்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.