சோசியல் மீடியாவில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியில் வாழ்ந்து வருபவர் 29 வயதுடைய முத்துக்குமார். இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, இணையத்தில் அந்தப் பெண்ணு அனுப்பி பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து புகார் வந்ததையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் சைபர் இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்திற்கு அருகே இருக்கும் அந்தியூரில் இருந்த முத்துக்குமாரை கைது செய்தார்கள். முத்துக்குமாரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் முத்துக்குமார் கேரள மாநிலத்தில் தங்கி பெயிண்டர் ஆக வேலை பார்த்து கொண்டிருக்கின்றார்.
வேலை முடிந்து ஓய்வு நேரத்தில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் தனக்கென ஒரு போலி ஐடி உருவாக்கி அதன்மூலம் அழகான பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களின் புகைப்படங்களை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து பல ஆண்களுடன் இருப்பதுபோல் ஆபாசமாக சித்தரித்து அதை அந்த பெண்ணின் ஐடிக்கு அனுப்பி தன்னுடன் தனியாக இருக்க வேண்டும் எனவும் பணம் தரவேண்டும் எனவும் தர மறுத்தால் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு விடுவேன் எனக் கூறி மிரட்டி இருக்கின்றார். இதைப்போல இவர் 50க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளது தெரிய வந்திருக்கின்றது.