சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி சென்ற இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது சோளத்தட்டுகளுக்கு அடியில் 50 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சரக்கு ஆட்டோ ஓட்டுனர் அருள்(36), கிளீனர் ரமேஷ்(60) என்பதும் தெரியவந்தது. இருவரும் கர்நாடகா மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து மைலம்பாடியில் இருக்கும் ஒரு குடோனில் பதுக்கி வைத்து அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, வெள்ளித்திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்க இருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்ததோடு, 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், சரக்கு ஆட்டோ ஆகியற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அசோக்குமார் (35), வஜ்ரவேல் (53), ரமேஷ் (58), ரஞ்சித் (31), திருப்பதி (32), ஜெகநாதன் (38), அருண் (36) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.