Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்ன ?

விவசாய பூமியான சோழவந்தான் தொகுதி உலக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களை உள்ளடக்கியது. மகாத்மா காந்தியின் வாழ்வின் முக்கிய நிகழ்வான நாகரீக உடையை துறந்து அரை ஆடை அணிய தொடங்கியது இங்கு தான். இந்த பகுதிக்கு வந்த சோழ மன்னன் நெல் உற்பத்தியை கண்டு உவந்து பாராட்டியதால் சோழன் உவந்தான் என அழைக்கப்பட்டதாகவும், நாளைடைவில் அதுவே சோழவந்தான் என மருவியதாகவும் கூறப்படுகிறது. இங்கு இதுவரை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 5 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ வாக அதிமுகவை சேர்ந்த மாணிக்கம் உள்ளார். மொத்தமாக 2,11,840 வாக்காளர்களை கொண்ட சோழவந்தான் தொகுதியில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என 2011 முதல் அமைச்சராக இருந்த  ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அறிவிப்பை தொடர்ந்து தொடங்கப்பட்ட பணிகள் 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், அரசு கல்லூரி அல்லது தொழிற் பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

வாடிப்பட்டி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான சர்க்கரை ஆலையை 2002ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதா மூடினார். பின்னர் அவரே மீண்டும் திறக்கப்படும் என 110 விதியின் கீழ் 2012ஆம் ஆண்டு அறிவித்தார். ஆனால் இன்றுவரை ஆலையை திறக்க துளி முயற்சியும் நடைபெறவில்லை. இதேபோல தென் தமிழகத்தின் ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலையான அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதனால் ஏராளமா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் அதிக அளவில் கொய்யா மற்றும் விவசாயம் செய்யப்படுவதால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. சாத்தியார் அணை நீரின்றி வறண்டு காணப்படுவதால் அதில் நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், அடிப்படை கட்டுமானத்திற்கு கூட காத்துக்கிடக்கும் நிலைமை என அதிருப்திகள் அதிகரித்துள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலில் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையோடு மக்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |