கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக போக்கு காட்டி வந்த ரஜினி இறுதியாக தமிழகத்தின் பெரும் அரசியல் தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பிறகு சிஸ்டம் சரியில்லை என்று சொல்லி அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். சமீபத்தில் தனது 70வது பிறந்த நாளை கொண்டாடிய ரஜினி, அதற்கு முன்பாக இம்மாத இறுதியில் கட்சி தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். தற்போது அது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 17-ல் எம்ஜிஆரின் பிறந்த நாள் வருகிறது. அன்றைக்கு கட்சி தொடங்கினால் தானும் எம்ஜிஆர் போன்று அரியணை ஏற முடியும் என கனவு காண்கிறார். இதனால் அந்த தேதி இறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் மன்ற வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஏ சி சண்முகத்தின் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த எம்ஜிஆரின் சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்றார். அங்கு பேசிய அவர் எம்ஜிஆரின் நல்லாட்சியை நான் தருவேன் என்று கூறினார். அதனால்தான் எம்ஜிஆரின் பிறந்தநாளில் கட்சி தொடங்குகிறார்.
ஆனால் ரஜினிக்கு முன்னதாகவே கமல் எம்ஜிஆர் எனும் பிம்பத்தை பயன்படுத்த தொடங்கி விட்டார். சமீபத்தில் மதுரையில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய அவர் கிராம மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் எம்ஜிஆரின் நீட்சி நான் என்று கூறினார். மேலும் ட்விட்டரில் “எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன் நான், தற்பொழுது இருப்பவர்கள் எம்ஜிஆரின் முகத்தை கூட பார்த்தது கிடையாது” என்று பேசினார்.
தேர்தலுக்கு சரியாக இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் தற்பொழுது கட்சி தொடங்குவது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் ஆந்திராவில் என்டிஆர் இதேபோன்று தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் கட்சி தொடங்கினார் என்று கூறுகின்றனர்.