கர்நாடக மாநிலத்தில் அதிவேகமாகப் பரவும் ஒமிக்ரான் நோயை கட்டுப்படுத்துவதற்கு அடுத்த பத்து நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு போட்டுள்ளது. அந்த வகையில் உயர்ந்து வரும் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு கர்நாடக மாநிலத்தில் அடுத்து பத்து நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சுகாதாரம் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சரவை ஞான இந்திரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில்,
ஜனவரி 7ம் தேதி காலை வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு, இந்த ஊரடங்கு காலத்தில் எந்தவித நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது. புத்தாண்டு விழாக்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடுவதையும் அரசாங்கம் தடை செய்துள்ளது. மேலும், உணவகங்கள், ஹோட்டல்கள், பப்கள், கிளப்புகள் போன்ற இடங்கள் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை 50 சதவீத இருக்கை வசதியுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்தியாவசிய நடவடிக்கைகள், நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், தொழில்கள் மற்றும் நிறுவனங்கள், பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ, விமானப் பயணம், ஹோம் டெலிவரி மற்றும் இ-காமர்ஸ் செயல்பாடுகள் தவிர, தனிநபர்களின் நடமாட்டம் கண்டிப்பாகத் தடை செய்யப்படும். இரவு ஷிப்டுகளில் பணிபுரியும் நிறுவனங்களின் பணியாளர்கள் அடையாள அட்டையுடன் செல்லலாம். IT மற்றும் ITeS நிறுவனங்களின் அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும்.