மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாதுஷேக் என்பவர் பிர்பும் மாவட்டத்திலுள்ள பர்ஷல் கிராம பஞ்சாயத்து துணை தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரத்தில் ஒரு கும்பல் பதிலடி கொடுக்கும் வகையில் போக்டுய் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தியது. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ராஜ்யசபாவில் இந்த விவகாரம் எதிரொலித்தது. அப்போது பேசிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ரூபா கங்குலி, “2 குழந்தைகள் உட்பட 8 பேர் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முன்னதாக அவர்கள் 8 பேரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் மேற்கு வங்க மக்களுக்கு காவல்துறையினர் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. மேலும் மக்கள் அனைவரும் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். எனவே ஜனாதிபதி ஆட்சி மேற்குவங்கத்தில் அமலுக்கு வர வேண்டும்” என்று அவர் கூறினார்.
மேலும் சபையிலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜக எம்பி ரூபா கங்குலியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். அதோடு மட்டுமில்லாமல் சபையின் மையப்பகுதிக்கு வந்த அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் அவர்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் எதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 25 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.