இலங்கை நாட்டில் நடந்ததை போன்று ஈராக் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈராக் நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று ஷியா மதகுருமார்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. அதனால் ஈராக் நாட்டின் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல்-சதர் தான் அரசியலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளர். அதனால் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வன்முறை வெடித்துள்ளது.
மதகுரு முக்தாதா அல் சதார் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த வன்முறை மோதலில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். கோபமடைந்த போராட்டக்காரர்கள், அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகை மற்றும் அரசு கட்டிடங்களுக்குள் புகுந்து பாதுகாப்பு படையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். நெருக்கடியான இந்த சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்க தூதரக ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த ஈராக் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
இது குறித்து போராட்டக்காரர்களின் காணொலி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஜனாதிபதி மாளிகையின் நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் நீந்திக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. தொடர் பதற்றம் நீடிப்பதால் ஈராக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் இலங்கையில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து முற்றுகை போராட்டம் நடத்தியது போல், ஈராக்கிலும் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கையகப்படுத்தியுள்ளதால் பதற்றம் நிலவுகின்றது.