ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கையானது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள் அனைவரையும் வங்கி சேவைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகளில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு மத்திய மாநில அரசுகளின் உதவிகளும் இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு கிஷான் அட்டையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதி சேவை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2015 மார்ச் மாதத்தில் 14.72 கோடியாக இருந்த வங்கிக் கணக்கு, 2021 ஜூலை 21ஆம் தேதி வரையில் 42.76 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மதிப்பு அடிப்படையில் பார்த்தால், 2015 மார்ச் 15ஆம் தேதியில் ஜன் தன் வங்கிக் கணக்கில் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட்களின் மதிப்பு ரூ.15,670 கோடியாக இருந்தது. அது 2021 மார்ச் மாதத்தில் ரூ.1,45,551 கோடியாக அதிகரித்துள்ளது. ஜன் தன் யோஜனா திட்டத்தில் பெண்கள்தான் அதிகம் கணக்கு பிறந்துள்ளனர். மார்ச் மாத நிலவரப்படி ஜன் தன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்களில் சுமார் 55 சதவீதத்தினர் பெண்களாக உள்ளனர். தற்போது இவர் வரை இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 19.04 கோடிப் பெண்களுக்கு ரூ.6.36 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.