அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவர், ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்காவில் 46ஆவது அதிபராக பதவியேற்றுக் கொள்ளவிருக்கிறார்.
இருப்பினும், தற்போதைய அதிபர் ட்ரம்ப் இதுவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் பெரியளவில் முறைக்கேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், இது குறித்து பல்வேறு வழங்குகளை தொடர்ந்துள்ளார்.
வழக்கமாக புதிய அதிபர் பதவியேற்கும் விழாவில் பழைய அதிபரும் பங்கேற்பது வழக்கம். கடந்த 2017ஆம் ஆண்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்கும்போது முன்னாள் அதிபர் ஒபாமா அந்த பதவியேற்கும் விழாவில் பங்கேற்றார்.
ஆனால், இந்த வழக்கத்தை அதிபர் ட்ரம்ப் பின்பற்றமாட்டார் என்று தகவல் வெளியானது. பாக்ஸ் நிறுவனத்திற்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டியில், “நாங்கள் மிக முக்கிய வேலையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். நான் இதைப் பற்றி பேச விரும்புகிறேன்.
நம் நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அதிபரையும்விட எனக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. ஒபாமாவைவிட 7.5 கோடி பேர் எனக்கு கூடுதலாக வாக்களித்துள்ளனர். தேர்தலில் நாங்கள் தோற்றதாகக் கூறுகின்றனர். ஆனால் நான் தோற்கவில்லை.
மேலும், இந்த நாட்டின் அதிபராக சட்டத்துக்கு புறம்பான ஒரு நபர் இருப்பது குறித்து நான் கவலைப்படுகிறேன்” என்றார்.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பது குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, “அது குறித்து பேச விரும்பவில்லை” என்று ட்ரம்ப் பதிலளித்தார்.