தமிழக சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய செயலர் தலைமையிலான குழு வரும் 21ஆம் தேதி தமிழகம் வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ளன. தற்போது தேர்தல் கமிஷனும் தேர்தலுக்கான ஆரம்பப் பணிகளை தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 16ஆம் தேதி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கப்பட்டது . டுத்த மாதம் 20ஆம் தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உட்பட தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தேர்தல் கமிஷன் செயலர் உமேஷ் தலைமையில் உயர்நிலை குழு 21ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை எஸ்.பிக்கள் பங்கேற்கும் ஆய்வு கூட்டத்தில் ஜனவரி 22ஆம் தேதி உயர் அதிகாரிகளையும் சந்தித்து தேர்தல் கமிஷன் உயர்நிலைக் குழு ஆலோசனை நடத்த உள்ளது.