ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே. இவர் கடந்த 2012-2020 வரை ஜப்பானின் பிரதமராக பணிபுரிந்தார். இந்த நிலையில் அந்த நாட்டின் நரா எனும் நகரத்தில் நடந்த பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோஅபே கலந்துகொண்டார். அதாவது சாலை பகுதியில் நடந்த அந்நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். இதனால் அபேவின் முதுகுப் பக்கத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது.
இதன் காரணமாக அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து அங்கு பணியிலிருந்த பாதுகாப்பு படையினர் ஷின்சோ அபேயை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தற்போது மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவுமின்றி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அபே மீது துப்பாக்கிசூடு நடத்திய நபரை ஜப்பான் காவல்துறையினர் துரத்திச்சென்று விரட்டிப் பிடித்தனர். இதற்கிடையில் சுட்ட நபர் தானே தயாரித்த துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் பிடிபட்ட சந்தேக நபர் யமகாமி டெட்சுயா(40) நாராவைச் சேர்ந்தவர் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகிறது. இதுகுறித்து ஜப்பான் காவல்துறையினர் கூறியதாவது “துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டது.
உடனே அவருக்கு இரத்தம் வந்ததை அடுத்து அபேவிற்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று கூறினார். மேலும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஷின்சோ அபே விரைவில் குணமடைய தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது “அபே என்னுடைய உண்மையான நண்பர். அவரை மிகவும் நேசித்த மற்றும் போற்றிய ஜப்பானின் மக்களுக்கு இது மிகப்பெரிய வேதனை ஆகும். ஷின்சோ மற்றும் அவரது அழகான குடும்பத்துக்காக நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம்” என கூறியுள்ளார்.