பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே ஆவார். இவருடைய வயது 67 ஆகும். கடந்த 2006-07 மற்றும் 2012-20 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானின் பிரதமர் பதவி வகித்துள்ளார். இவர் அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசத்தொடங்கிய சில மணி நேரத்தில் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த துப்பாக்கி குண்டு அவர் கழுத்தில் பாய்ந்துள்ளது. இதனையடுத்து அவரை உடனடியாக அவசர சிகிச்சைக்காக நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் ஷின்ஜோ அபேயை காப்பாற்ற முடியவில்லை. அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்தார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு இந்தியா பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷிய அதிபர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி மற்றும் தைவான் அதிபர் சாய் இங் வென் என உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அபேயின் பயங்கரமான கொலையால் வருத்தமடைந்துள்ளார் . அவர் பலதரப்புவாதத்தின் உறுதியான பாதுகாவலராகவும், மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவாளராகவும் நினைவு கூறப்படுவார்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.