ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீரின் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள பொம்பே மற்றும் கோல்பாரா ஆகிய இரண்டு கிராமங்களில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த இரண்டு கிராமங்களிலும் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் நேற்று தீவிரமாக தேடி பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலால் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இந்த இரு கிராமங்களில் இன்னும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக மோதல் தொர்ந்து நடைபெற்று வருவதாகவும் காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.