Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு விழாவில்… வளர்த்த காளை முட்டி பரிதாபமாக இறந்த விவசாயி… மேலும் 25 பேர் காயம்..!!

புகையிலை பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் குடல் சரிந்து விவசாயி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், புகையிலைப்பட்டியில்  புனித சந்தியாகப்பர் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு ஆரம்பித்தது.இந்த ஜல்லிக்கட்டு விழாவை திண்டுக்கல் ஆர். டி. ஓ பிரேம் குமார் தலைமை தாங்கினார். இவர்  கொடியசைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தார். இந்த விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலை வகித்துள்ளார்.

இந்த விழாவில் முதலில் ஊர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதை யாருமே பிடிக்கவில்லை. இதையடுத்து மதுரை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. வாடி வாசலுக்கு வெளியே வீரத்துடன் மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து காளைகளை பிடிக்க மல்லு கட்டினார்கள்.

ஆனால் சில காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டிவிட்டு பிடிபடாமல் சென்றுவிட்டது. மேலும் சில காளைகள் களத்தில் நின்று விளையாடி மாடுபிடி வீரர்களை முட்டி தூக்கி வீசியது. ஆனாலும் மாடுபிடி வீரர்கள் காளைகளைப் போட்டி போட்டு அடக்கி தங்களது வீரத்தை காட்டினார்கள். இதைப் பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள். இந்த ஜல்லிக்கட்டு விழா மாலை 4 மணி அளவில் நிறைவடைந்தது.

இந்த விழாவில் மொத்தம் 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு அதில் சுமார் 400க்கும் அதிகமான மாடிப்படி வீரர்கள் கலந்து கொண்டு ஒரு சுற்றுக்கு 50 பேர் வீதம் எட்டு சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டு விளையாடினார்கள். இந்த ஜல்லிக்கட்டு விழாவில் நத்தம் அருகில் நடுவனூரில் வசித்துவந்த விவசாயியான தங்கவேல்(54) என்பவர் தனது காளையை கொண்டுவந்துள்ளார். அதன்பின்னர் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட தனது காளையை பிடிப்பதற்காக மைதானத்திற்கு வெளியே தங்கவேல் நின்று கொண்டிருந்தபோது அந்த காளையை பிடிக்க முயற்சி செய்தார்.

அப்போது திடீரென்று எதிர் பாராத விதமாக அந்த காளை தங்கவேலை முட்டி தூக்கி வீசியதில் குடல் சரிந்த நிலையில் தங்கவேல் உயிருக்கு போராடினார். உடனே இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வளர்த்த காளையே  உரிமையாளரின் உயிரை பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு விழாவில் காளைகள் முட்டியதால் பார்வையாளர்கள் மாடுபிடி வீரர்கள் உட்பட 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பில்லமநாயக்கன்பட்டி யில் வசித்து வந்த 25 வயதுடைய வீரபத்திரன், நல்லாம்பட்டியில் வசித்து வந்த 29 வயதுடைய கருப்பையா, வீரசின்னம்பட்டி பகுதியில் வசித்து வந்த 27 வயதுடைய சரவணன், புகையிலைப்பட்டி பகுதியில் வசித்துவந்த 26 வயதுடைய டேவிட் உட்பட 11 பேர்  மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.  மற்றவர்களுக்கு  புகையிலைப்பட்டியில் உள்ள தற்காலிக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர் .

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் பிடிபடாத காளைகளின் உரிமையாளருக்கும், கா ளையை அடக்கி பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா பாத்திரங்கள், வெள்ளிக்காசுகள் என பல்வேறு பரிசுப் பொருட்கள் மற்றும் சிலருக்கு ஆடுகள் பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு விழாவில் 100 க்கு அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது சாணார்பட்டி தனிப்பிரிவு போலீஸ்காரர் 39 வயதுடைய மோகன் என்பவர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்தக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர்கள்  மோகனை கயிறு, உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பித்து சென்றனர். இதனால் படுகாயம் அடைந்த மோகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீஸ்காரரை தாக்கிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |