கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ள நாகமங்கலம் ஊராட்சியில் அரசு பட்டுபண்ணை அருகே டாட்டா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜல்லி கற்கள் ஏற்றி கொண்டு டிப்பர் லாரி கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மபுரியைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் ஜல்லி கற்களை கொட்டும் போது மேலே சென்ற மின்சார கம்பியில் லாரி உரசியதால் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனால் சுதாரித்துக் கொண்டு செந்தில் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.