பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியுள்ளது. நாட்டில் கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படும் இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 2024 வருடத்திற்குள் கர்நாடகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
ஆனால் கர்நாடக சட்டசபைக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு முன்னதாக பெரும்பாலான கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாநில அரசு திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி முதல் மந்திரி கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குள் 21 லட்சத்து 63 ஆயிரத்து 817 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் அந்த இலக்கையும் தாண்டி 21,81,557 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை வழங்கி சாதனைப்படைத்து இருக்கின்றனர்.
இதற்கு முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அடுத்த வருடம் ஏப்ரல் மே மாதம் நடைபெற இருக்கின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மொத்த இலக்கில் 75 சதவிகித வீடுகளுக்கு குடிநீர் இழப்பை வழங்க வேண்டும் எனவும் இதற்காக அதிகாரிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் எனவும் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இதுவரை 55.66 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் கர்நாடக தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.