மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவராம்பேட்டை வடக்கு தெருவில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன், பழனி ஆகியோரும் தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று வேலை முடிந்த பிறகு மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடையநல்லூருக்கு ஜவுளி எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சொக்கம்பட்டி சந்தன மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது உத்தமபாளையம் நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த பழனி, முருகேசன் ஆகிய இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.