நாய்க்கு வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம், முதுநகர் அருகில் காரைக்காடு மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சங்கர். இவருடைய மனைவி ஜீவா. சங்கர் கடலூர் சிப்காட்டில் இருக்கின்ற ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். கணவன், மனைவி இருவரும் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்துள்ளார்கள். அந்த நாய்க்குட்டிக்கு ஜாக்கி என பெயரிட்டு கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் வளர்த்து வருகிறார்கள். அந்த நாய் மீது குடும்பத்திலுள்ள அனைவரும் அதிகமாக அன்பு காட்டினார்கள். அதேபோன்று நாயும் சங்கர் குடும்பத்துடன் அதிகம் பாசமாக காட்டி வந்துள்ளது.
இந்நிலையில் தற்சமயம் ஜாக்கி கருவுற்று இருப்பதால் அதற்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்று சங்கர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து நெருங்கிய சொந்தக்காரர்கள், அருகில் இருந்தவர்களை அழைத்து நேற்று முன்தினம் ஜாக்கிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் நாய் கழுத்தில் தங்கச் சங்கிலி, மாலை அணிவித்தனர். அதன்பின் பெண்களுக்கு எப்படி வளைகாப்பு நடத்தப்படுகிறதோ அதேமாதிரி பூ, பழங்கள், வளையல்கள் வைத்து மஞ்சள் குங்குமமிட்டு நலங்கு வைத்து நாயை ஆசீர்வாதம் செய்துள்ளனர். நாய்க்கு வளைகாப்பு நடத்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.