மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 3ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தியதில் 1.33 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இதில் மாடல் அழகி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் 18 பேரை கைது செய்தனர்.இதனிடையே ஷாருக்கானின் மகனுக்கு பாலிவுட் பிரபலங்களான திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா நடிகர்கள் ரித்திக் ரோஷன், பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத் இந்த பிரச்சனையை வைத்து சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் அவரின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பொழுது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதை பதிவிட்டு, #justsaying என்ற ஹேஷ்டாகில் ஷாருக்கானின் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.