காணாமல் போன கல்லறைகள் ஆணவப்படம் வெளியீடு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சாதியின் பெயரால் யார் யார் மீது ஆதிக்கம் செய்தாலும் அது தவறு, அது கண்டிக்கத்தக்கது, தண்டனைக்குரியது. சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் இங்கே இன்னும் பாகுபாடுகள் தொடர்கின்றன. அண்மையில் கூட நாகர்கோவிலில் மீனவ சமூகத்தைச் சார்ந்த ஒரு மூதாட்டியை மீனவப் பெண் என்ற அடிப்படையில் பேருந்திலிருந்து இறங்கி விட்ட ஒரு கொடுமை நடந்தது.
அதற்கடுத்து அதே நாகர்கோவிலில் நரிக்குறவர் குடும்பத்தைச் சார்ந்த கணவன், மனைவி, குழந்தை ஆகியோரை பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக அவர்களின் உடமைகளை எல்லாம் தூக்கி வெளியே எறிந்து விட்டு கீழே இறக்கி விட்டிருக்கிறார்கள் அந்த குழந்தை அவ்வளவு தூரம் அலறியும் கூட இரக்கமில்லாமல் நடந்திருக்கிறார்கள். அதேபோல இந்த பிரச்சனையும் கோவிலுக்குள் பிற மதங்களைச் சார்ந்தவர்கள் வரக்கூடாது என்று அடிப்படையிலே ஒரு பாகுபாடு நிகழ்ந்திருக்கிறது.
அரசு கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட பாகுபாடுகளை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் செய்யக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.