சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் அனைத்து சமுதாய மக்களாலும் மத நல்லிணக்க திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் ஒன்றியத்தில் மதநல்லிணக்க ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழாவை அனைத்து சமுதாய மக்களும் வருடம்தோறும் இணைந்து நடத்துவது வழக்கம். இந்த வருடத்திற்கான திருவிழா ஷாபான் 1-ம் பிறையில் கொடியேற்றத்துடன் நடைபெற்றது. சந்தனக்கூடு ஷாபான் 10-ம் பிறையில் நகர் வலம் வந்து அதன் பின் ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்ஹாவிற்கு வந்தடைந்தது. அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொடியேற்றம் துவங்கிய நாள் முதல் வீடுகளில் பேரிச்சம் பழம், சர்க்கரை, பழங்கள் வாங்கி பாத்தியா ஓதப்பட்டு நார்ஷா எனும் இனிப்பு அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது.
இதில் கே.புதுப்பட்டி, கரிசல்பட்டி, கரியாம்பட்டி என மூன்று கிராமங்களில் வாழ்ந்து வரும் அனைத்து சமுதாயங்களை சேர்ந்த மக்களும் இணைந்து நடத்தும் விழாவாகும். இந்த மத நல்லிணக்க விழாவிற்கு கரிசல்பட்டி நாட்டாண்மை அபி முகமது என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஜமாத் கமிட்டி தலைவர் சையது என்பவர் முன்னிலை வகுத்துள்ளார். நிர்வாக குழு கமிட்டி மக்கள் அப்துல் ரஷீது, ஷாஜகான், ரகுமத்துல்லா, இதயத்துல்லா, ஷாகுல் ஹமீது ஆகியோர் மேற்பார்வையில் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு நடன குதிரைகள் நடனமாட சந்தனகூடை தூக்கி நகர் வலமாக கொண்டு சென்றனர். அதன் பின்னர் சந்தனக்கூடு ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்ஹாவை வந்து சேர்ந்தது. அங்கு சந்தனகூடத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தனம், சந்தனம் குடத்திலிருந்து பொதுமக்களுக்கு எடுத்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அனைத்து மக்களும் சாதி, மத வேறுபாடின்றி நடத்தக்கூடிய திருவிழா இந்த மத நல்லிணக்கன சந்தனக்கூடு திருவிழா ஆகும்.