இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் சற்றும் சளைக்காத வகையில் விடுதலைப் போரில் தமிழகம் செய்த 250 ஆண்டுகால தொடர் பங்களிப்பு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது.
வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகியோர்கள் தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை.. இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்தனர்.. இதையடுத்து பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு தங்களது மாநில அலங்கார ஊர்தி கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்று கடிதம் எழுதி இருந்தார்..
இந்த சூழலில் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்காதது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாது என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் இன்று திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. அதில், குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும் மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு ஆனது இந்த ஆண்டு இந்தியா 75 என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் இடம்பெற வேண்டி விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை பறை சாற்றுகின்ற வகையில் அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வு குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு மூன்று முறை அவர்கள் கூறிய திருத்தங்களைச் செய்தோம்
நான்காவது கூட்டத்திற்கு எந்த ஒரு காரணமும் இன்றி அழைக்காமல் அதுகுறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்த எனது வருத்தத்தை நேற்று பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இன்று கிடைக்கப்பெற்ற மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சரின் கடிதத்தில் எந்தவித காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் சற்றும் சளைக்காத வகையில் விடுதலைப் போரில் தமிழகம் செய்த 250 ஆண்டுகால தொடர் பங்களிப்பு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும். முதல் இந்திய சுதந்திரப் போர் என போற்றப்படும் சிப்பாய்ப் புரட்சிக்கு (1857) அரை நூற்றாண்டுக்கு முன்பே நடந்தேறிய வேலூர் புரட்சி ஆங்கிலேய வல்லாதிக்க எதிர்ப்பு வரலாற்றில் முக்கிய தொடக்கமாகும்.
அதேபோல் ஜான்சிராணி வால் வீசுவதற்கு முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே ஆங்கிலேயர்களை தீவிரமாக எதிர்த்துப் போரிட்டு தான் இழந்த நாட்டை வென்ற ஒரே ராணி என்ற புகழைப் பெற்றவர் வீரத்தாய் வேலுநாச்சியார்..
ஆங்கில அடக்குமுறைக்கு எதிராக பலமுறை போரிட்ட பூலித்தேவன் ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிரான போரில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வீரன் சுந்தரலிங்கம் மருது சகோதரர்கள் தீரன் சின்னமலை உள்ளிட்ட எண்ணிலடங்கா வீரர்களை விடுதலை தியாகத்திற்கு தந்த மண் தமிழ் நாடாகும்.
ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு போட்டியாக சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் பெரும் கனவை நெஞ்சில் ஏந்தி தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இழந்து ஆங்கிலேயே அடக்குமுறைக்கு எதிராக செயல்பட்டு இரட்டைத் தீவாந்திர தண்டனை பெற்றவர் வ.உ சிதம்பரனார், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தனது வீரமிக்க கவிதைகளால் விடுதலை வேள்வி செய்தவர் பாரதியார், இத்தகைய விடுதலைப் போராட்ட தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூறும் விதமாக தான் நமது அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டுப்பற்றும் விடுதலை வேட்கையும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும். மேலும் சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற புகைப்படக் கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.