ஜாமீன் கையெழுத்து போட சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொன்மனை குற்றியான்விளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு அஜித்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு டெம்போ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒருவரிடம் தகராறு ஈடுபட்ட குற்றத்திற்காக அஜித்தை குலசேகரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 15-ஆம் தேதி அஜித் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
பின்னர் 23-ஆம் தேதி காலை அஜித் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போட வேண்டும் என தாயிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். அன்றைய தினம் திடீரென அஜித் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஜித்தின் தந்தை சசிகுமார் கூறியதாவது, எங்கள் மகன் ஜாமீனில் கையெழுத்து போட வேண்டும் என்றும், காவல்துறையினர் வாங்கி வைத்திருக்கும் செல் போனை திரும்ப பெற வேண்டுமெனவும் கூறிவிட்டு சென்றான்.
அவனை காவல்நிலையத்தில் வைத்து தாக்கி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால்தான் எங்கள் மகன் உயிரிழந்தான். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளதாக அஜித்தின் தந்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, சம்பவம் நடைபெற்ற அன்று மதியம் 2 மணி அளவில் காவல் நிலைய வாசலில் நின்று அஜித் போலீசாரை அவதூறாக பேசினார்.
அப்போது திடீரென அஜித்தின் வாயிலிருந்து நுரை வந்ததால் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் வாலிபர் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.