பிரபல ரவுடியை சகோதரர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பகுதியில் பிரபல ரவுடியாக ராஜசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் சிறையில் இருந்த ராஜசேகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் மணலி சின்னசேக்காடு பகுதியில் இருக்கும் காலி மைதானத்தில் அமர்ந்து ராஜசேகரன் மது குடித்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றிவளைத்து விட்டனர். அதன்பிறகு மர்ம நபர்கள் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜசேகரன் அவரது நண்பரான ஜெயக்குமார் என்பவரோடு இணைந்து அப்துல் கலாம் நகரில் வசிக்கும் சகோதரர்களான விக்னேஷ் மற்றும் சதீஷ் குமார் ஆகியோரை தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சகோதரர்கள் ராஜசேகரனை வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து விக்னேஷ் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.