இந்தியா முழுவதிலும் கொரோனா காரணமாக பல்வேறு தொழில் துறைகளில் பாதிப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அரசுக்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனால் நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு ஊழியருக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் பாக்கித் தொகையும் வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி நிறுவனங்களின் நிதி நிலையும் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவுவதற்கு முந்தைய காலத்தில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு சுமார் 9.25 சதவீதம் இருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று தொடங்கிய பின் 2021ஆம் வருடம் சம்பள உயர்வு 8.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வருவதால் 2022ஆம் ஆண்டு 9.5 சதவீதமாக உயர்வு பெறும் என்று கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் கான்ஃபெரி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், 2022-ம் வருடத்தில் பல துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து பல்வேறு நிறுவனங்களின் வருவாய் அதிகரித்து வருவதால் கட்டாயமாக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்று தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தில் ஊழியர்கள் 10% சம்பளம் உயர்வு பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆய்வின் முடிவில் 46 % நிறுவனங்கள் தங்கள் லாபத்தை ஊழியர்களின் சுகாதாரத்துக்கு செலவிட்டுள்ளனர் என்றும் 43 சதவீத நிறுவனங்கள் தங்களின் லாபத் தொகையை வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு வீட்டிலேயே அலுவலக அமைப்பை ஏற்படுத்தி தருவதற்கு செலவிட்டுள்ளனர் என்றும் கான்ஃபெரி நிறுவனம் தெரிவித்துள்ளது.