தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் முறை பாதிப்படைகிறது என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10- 12ஆம் வகுப்பு மாணவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருடந்தோறும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பாக பருவ பாடபுத்தகங்கள் வழங்கப்படும். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 3-ம் பருவ பாடபுத்தகங்கள் வழங்க உள்ளன. அந்த பாடபுத்தகங்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த 3ஆம் பருவ பாட புத்தகங்கள் பள்ளிகள் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புத்தகங்கள் வைக்கப்பட்டது. அதன்பின் பள்ளிகளுக்கு புத்தகங்கள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெய்வாபாய் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து 3ஆம் பருவ புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அத்துடன் பள்ளி சீருடைகளும் வழங்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.