தமிழகத்தில் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு முக்கிய தினங்களில் விடுமுறை விடப்படும்போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் வருடம்தோறும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய நாட்களில் ஒன்று மகா சிவராத்திரி ஆகும். இந்த தினத்தின் போது பக்தர்கள் நாள் முழுவதும் உறங்காமல் கண் விழித்திருந்து இறைவனுக்கு பூஜை செய்வது வழக்கம் ஆகும்.
இந்த விரதம் வருடந்தோறும் மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2022 மார்ச் 1ம் தேதி (நாளை) மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும். இந்த சிறப்பு நாளில் கன்னியாகுமரியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டமானது நடைபெறும். இவ்விழாவில் அனைத்து பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சிவனை சுவாமி தரிசனம் செய்து விழாவை சிறப்பிப்பார்கள்.
இதன் காரணமாக குமரி மாவட்டத்திற்கு மார்ச் 1 (நாளை) உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆகவே அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அன்றைய தினம் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்கும் நோக்கில் தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த விடுமுறைக்கு பதில் மார்ச் 12ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்..