தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு வரி விலக்கு சலுகை உயர்த்தப்பட்டு இருப்பதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பண்டோபாத்தியா கூறியபோது, மத்திய அரசு அதன் ஊழியர்களின் ஊதியத்தில் 14 சதவீதத்தை என்.பி.எஸ்., எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரவு வைக்கிறது. இத்தொகைக்கு மத்திய அரசு ஊழியர்கள் வரி விலக்கு சலுகை பெறுகிறார்கள்.
அதே நேரம் மாநில அரசுகள் அதன் ஊழியர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் மட்டுமே தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரவு வைக்கிறது. இதற்கு மாநில அரசு ஊழியர்கள் வரிவிலக்கு சலுகை பெறுகிறார்கள். இதுபோன்ற பாகுபாட்டை நீக்கி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் வரி விலக்கு சலுகையை போல, மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பெறும் வரி விலக்கு சலுகை வரம்பு, 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்கள் பெறும் சமூக பாதுகாப்பு பயன்களை, மாநில அரசு ஊழியர்களும் பெற வழிவகை செய்துள்ளது என்று அவர் கூறினார்.