கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடந்தது. இவற்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை போன்றோர் பங்கேற்றனர். புதுச்சேரி அரசு சார்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். ஆந்திரா, தெலங்கானா அரசுகள் சார்பாக பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாநில எல்லை குறித்த பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு, சாலை மற்றும் போக்குவரத்து, பாதுகாப்பு, எரிசக்தி ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அதன்பின் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஜிஎஸ்டிமுறை அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது என குறிப்பிட்டார். அத்துடன் நம் மொழிகள் அனைத்தும் திராவிடமொழி குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வோடு அனைத்து பிரச்னைகளையும் தீர்த்திடவேண்டும் என தென்னிந்திய முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தார். அண்டைமாநிலங்களை இணைக்கும் அடிப்படையில் அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.
புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுதையும் கொள்முதல் செய்ய தங்கள் அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் மின் வாரிய திருத்த மசோதாவை கைவிடவேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். வெள்ளபாதிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணநிதியை மத்திய அரசு உடனே விடுக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அடுத்த தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை தமிழகத்தில் நடத்தவேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.