சென்னையில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த சாலையை தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், வெளியூர் சென்று விட்டு திரும்புபவர்கள், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் நபர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இங்கு குறிப்பாக விடுமுறை தினங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் பெருங்களத்தூரில் அமைந்துள்ள பேருந்து நிலையம் ஆகும். அது மட்டுமின்றி செங்கல்பட்டு பகுதியில் இருந்து பெருங்களத்தூர் வரை அமைந்துள்ள தொழில் நிறுவனங்களும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி சாலையை விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்ட துவக்கமாக மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பெருங்களத்தூர் ரயில்வே நிலையம் அருகே தாம்பரம் முதல் வண்டலூர் வரை 1.2 தூரத்திற்கும், தாம்பரம் கிழக்கு பைபாஸ் சாலைக்கு செல்வதற்காக 250 கிலோ மீட்டர் நீளத்திலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் தாம்பரத்திலிருந்து வண்டலூர் வரையிலான மேம்பாலம் வரும் ஆகஸ்டு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு பைபாஸ் சாலையில் நிலம் கையகப்படுத்துதல் பிரச்சனையின் காரணமாக மேம்பாலம் அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பகுதியில் வனப்பகுதி மற்றும் Tangedco துணை மின் நிலையமும் அமைந்துள்ளதால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் வனப்பகுதிக்கு பதிலாக மாற்று இடம் கையகப்படுத்தப்பட்டவுடன் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறும். மேலும் 6 கிளைகள் கொண்ட ரோட்டரி வகையிலான சாலை மேம்பாலமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 235 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த பாலம் கட்டும் பணியும் நிறைவடைந்து விட்டால், போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.