ஜிஎஸ்டி வரி வசூல், அக்டோபரில் நான்காவது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் (ரூ.1.30 லட்சம் கோடி) ஆக உள்ளது. ஜூலை 1, 2017 அன்று அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் இரண்டாவது அதிகபட்ச வசூல் இதுவாகும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் 2021 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,30,127 கோடியாகும்.
இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.23,861 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.30,421 கோடி, மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு மற்றும் சேவை வரி ரூ.67,361 கோடி ஆகும்.
2021 அக்டோபர் மாதத்திற்கான வருவாய், கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த ஜிஎஸ்டி வருவாயை விட 24 சதவீதம் அதிகமாகவும், 2019-20 இல் கிடைத்த வருவாயை விட 36 சதவீதம் அதிகமாகவும் உள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.