டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் கடந்த வாரம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக ஜியோ மொபைல் எண்ணை புறக்கணித்து, பிஎஸ்என்எல்-க்கு மாற்ற வேண்டும் என்றும் பலரும் பிரசாரம் செய்து வருகின்றனர். இதன் பின்னணியில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்களின் ஊழியர்கள்,முகவர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் இருப்பதாக ஜியோ குற்றம் சாட்டியுள்ளது.