பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் நேரு மைதானத்தில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 3 நாள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பட்டு மற்றும் பருத்தி நூல்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் நெசவாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே இத்தகைய விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கைத்தறி துணிகளுக்கு முழுமையான தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும், கைத்தறி ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் சேஷய்யன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து துணை தலைவர் கோவிந்தன், செயலாளர்கள் ருக்மாங்கதன், கோதண்டராமன், பட்டு சிறு உற்பத்தி சங்க தலைவர் சிவராமன், ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பட்டு பஜார் கடை சங்க நிர்வாகிகள் ரவீந்திரன், ஜனார்த்தனன், வலது கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜன் உட்பட நெசவாளர்கள் பலரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.