ஜி.எஸ்.டி வரி தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் மீது அதிக அளவில் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவது கடும் வேதனையை அளிக்கிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஜி.எஸ்.டி வரி விதிப்பால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதை கண்டு கொள்ளாத மோடி அரசு கொடுமையான ஆட்சியை செய்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி வரிக்கு மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் அந்த எதிர்ப்பை மீறி பிரதமர் மோடி ஜி.எஸ்.டி வரியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.
இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் உலக நாடுகளில் அத்தியாவசிய பொருள்களின் விலை குறையும் போது இந்தியாவில் மட்டும் அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனையடுத்து ஆண்டுதோறும் மக்கள் பயன்படுத்தும் அத்யாவசிய பொருட்களின் மீது மோடி அரசானது ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த வரி விதிப்பால் மாநில அரசுகளின் வருமானம் பறிக்கப்பட்டு கடன் சுமையானது அதிகரித்துள்ளது. அதன்பிறகு கைத்தறி மற்றும் நூல் மீது மோடி அரசு ஜி.எஸ்.டி வரியை விதிக்க வேண்டும் என்று கூறிய போது அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் தற்சமயத்திற்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பானது ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் திடீரென கத்தி, பிளேடு, சூரிய ஒளி சூடேற்றிகள், உமிழ் மின்விளக்குகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மீது ஜி.எஸ்.டி வரியானது விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை திரும்பப் பெறுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் வரி விதிக்கும் பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைக்காமல் மத்திய அரசுகள் நிர்ணயிப்பது மோடி அரசின் திறமையற்ற ஆட்சியை குறிக்கிறது. எனவே உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெறுமாறு மோடி அரசிடம் நான் கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.