ஜெர்மனியில் இன்று நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பல விவகாரங்கள் தொடர்பாக பேச இருக்கிறார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் கலந்துகொண்டுள்ள ஜி7 மாநாடு நேற்று தொடங்கியது. இவற்றில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் பல அமர்வுகளாக விவாதம் நடைபெற்றது. இதில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் முக்கியமான இடம் பிடித்தது. இதனிடையில் 7 நாடுகளின் தலைவர்களும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர். உக்ரைன் மற்றும் ரஷ்ய போரால் பாதிக்கப்பட்டுள்ள எரிப்பொருள் விநியோகத்தை சீரமைப்பது, பணவீக்க உயர்வை கட்டுப்படுத்துவது ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பருவநிலை மாற்றம், சுகாதாரம் போன்றவை குறித்து ஒரு அமர்விலும், உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம் ஆகியவை தொடர்பாக ஒரு அமர்விலும் பிற தலைவர்களுடன் மோடி கலந்துகொள்கிறார். இதற்கு முன்பாக ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரைஆற்றிய மோடி, உயிர்த் துடிப்புள்ள ஜனநாயகம்தான் இந்தியாவின் பெருமை என கூறினார்.
கலாசாரம், உணவு, உடை, இசை மற்றும் பாரம்பரியம் போன்றவற்றிலுள்ள பன்முகத்தன்மை தான் நம் ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்து இருப்பதாகவும், இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி, அவசரநிலை என்றும் தெரிவித்தார். அதனைதொடர்ந்து அர்ஜெண்டினா அதிபரான ஆல்பர்டோ பெர்னாண்டசை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இருநாடுகளுக்கும் இடையேயான பன்முக உறவுகள், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இருதலைவர்களும் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளை சேர்ந்த உயர்மட்டக் குழுவினரும் பங்கேற்றனர்.