இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இருப்பினும் அவ்வப்போது மின்சார வாகனங்கள் தீ பிடிப்பது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மக்களை மின்சார வாகனங்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கும் வகையில் ElectiVa என்ற நிறுவனம் ஜூன் 1-ஆம் தேதி முதல் இலவச சார்ஜர் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி டெல்லி முழுவதும் 40 சார்ஜிங் நிலையங்களை நிறுவி மின்சார கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இலவச சார்ஜ் வழங்கப்படும் என்றும், இந்த நிலையங்களில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டும் இலவச சேவை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டர் இடைவெளியில் இந்த சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் அங்கு கடந்த மார்ச் மாதம் வாங்கப்பட்ட வாகனங்களில் 19 சதவீதம் மின்சாரம் வாகனங்களே. இதனால் இந்த திட்டத்தை டெல்லியில் தொடங்குவதற்கு ElectiVa எலக்ட்ரிக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தற்போது டெல்லியில் ஒரு யூனிட் சார்ஜ் ரூபாய் பத்துக்கு விற்பனையாகி வந்த நிலையில் இந்த இலவச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.