ராஜஸ்தான் மாநிலம் சுர்வால் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த ஃபூல் முகமது அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைக்கும் நோக்கில் அங்கு சென்றார். இருப்பினும் அந்த நபர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த நவர் காவல்துறை மீது குற்றம் சாட்டி தற்கொலை செய்து கொண்டதால், பொதுமக்களின் கோபம் காவல்துறை மீது திரும்பியது. ஆய்வாளர் முகமதுவை சூழ்ந்த பொதுமக்கள் சரமாரியாக கற்களை வீசினார்.
அவர் ஜீப்பில் தப்பிக்க முயன்ற போதும் தொடர்ந்து விரட்டி சென்று கற்களை வீசினார்கள். இதனால் அவர் மயங்கி சரிந்தார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜீப்புடன் சேர்த்து அவரை தீ வைத்து கொலை செய்தனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை சாவானி மதோபூர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில், 30 பேரை குற்றவாளிகள் என உறுதி செய்து ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் குற்றச்சாட்டப்பட்டவர்கள் 49 பேர் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.