லாரி-ஜீப் நேருக்கு நேர் மோதியதில் ஜீப் டிரைவர் உள்பட 9 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள நாராயணதேவன்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். ஜீப் டிரைவரான இவர் சவாரிக்கு கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் உத்தமபாளையத்தில் இருந்து 9 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு மாலையில் மீண்டும் அவர்களை ஏற்றிக்கொண்டு உத்தமபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கம்பம்மெட்டு மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ஜீப் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் டிரைவர் பிரபு மற்றும் ஜீப்பில் இருந்த 9 பெண்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து படுகாயம் அடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்து சென்ற கம்பம் வடக்கு காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.