நாடாளுமன்றம் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 12 நபர்களை சேர்த்து 245 உறுப்பினர் இடங்கள் இருக்கின்றன. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் 6 வருடங்கள் ஆகும். இங்கு உறுப்பினர்களாக இருப்பவர்களில் 3ல் 2 பங்கு பேரின் 6 வருட பதவிக்காலம் ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை முடிவடையும். அந்த வகையில் வரும் ஜூன் மாதம் 20 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
அதன்படி திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வக்கீல் நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் போன்ற 6 பேருக்கும் வரும் 29/06/2022 அன்று பதவிக்காலம் முடிகிறது. இதேபோன்று கர்நாடகத்தில் பதவிக் காலம் நிறைவடையும் மாநிலங்களவை உறுப்பினர்களில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.