நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து வணிகர்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, காய்கறி பழக் கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மற்றும் சாராய கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். தனியார் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். பேருந்துகள், ஆட்டோ மற்றும் டாக்சிகள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளித்துள்ளது.