தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் ஜூன் மாதம் 4 ஆம் தேதி தொடங்கி ஜூலை 4-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை, திண்டுக்கல், சேலம் மற்றும் கோவை ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறுகிறது. கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் சென்னை தவிர்க்கப்பட்டுள்ளது.