நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலையில் ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 17ஆம் தேதி அதிகாலை முதல் 21ஆம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், இதற்காக sabarimalaionline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று முதல் ஆன்லைன் புக்கிங் தொடங்குகிறது என்றும் அறிவித்துள்ளது.