கேரளா மாநிலத்திற்குட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த மாணவர் சாரோன்ராஜ், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் வீட்டில் இருந்து பஸ்ஸில் தினசரி கல்லூரிக்கு செல்லும்போது காரக்கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கிரிஷ்மாவும் அதே பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு பேரும் நட்பாக பழகிய சூழ்நிலையில், அப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையில் இளம் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு திருமணம் செய்துவைப்பதற்காக ஏற்பாடு செய்தனர்.
அதன்பின் சென்ற 17ம் தேதி கிரிஷ்மா அழைத்ததை தொடர்ந்து தன் காதலியின் வீட்டிற்கு சாரோன்ராஜ் சென்றுள்ளார். இந்நிலையில் கிரிஷ்மா சாரொன்னுக்கு ஜூஸ் கொடுத்துள்ளார். அந்த ஜூஸ் குடித்த பிறகு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது போன்று சாரோன்ராஜ் உணர்ந்த சூழலில் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். எனினும் சில நாட்களில் அவரது உடலின் சில பாகங்கள் பாதிப்புக்குள்ளான நிலையில், 4 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனிடையில் இளம்பெண் அளித்த ஜூஸ் குடித்ததால் தன் மகனுக்கு உயிரிழப்பு ஏற்பட்டதாக சாரோன்ராஜின் தந்தை ஜெயராஜ் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.
அந்த புகாரின்படி தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது, அப்பெண்ணின் ஜாதகப்படி முதல் கணவன் உயிரிழப்பான், பின் 2வது கணவருடன் கிரிஷ்மா சந்தோஷமாக இருப்பார் என ஜோதிடர் கூறி இருக்கிறார். ஆகவே சாரோன்ராஜை காதலித்து கொலை செய்து விட்டு 2வது திருமணம் செய்து ஆடம்பரமாக வாழ அப்பெண்ணும், குடும்பத்தினரும் திட்டமிட்டு இருக்கின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.