ஜெயங்கொண்டம் தொகுதியில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்கள் கட்டிடக்கலையின் பெருமையாக விளங்கும் பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு கட்டிடக்கலையின் சான்றாக விளங்குகிறது. நிலக்கரி படிமம் அதிக அளவில் கிடைக்கும் தொகுதியாகவும் இது உள்ளது. விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இப்பகுதியில் முந்திரி அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
ஜெயங்கொண்டான் சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக மற்றும் காங்கிரஸ் தலா 4 முறை வென்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர் மற்றும் பாமக தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளனர். தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் ராம ஜெயலிங்கம் ஜெயங்கொண்டம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,66,013 ஆகும். ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது பல்லாண்டு கால கோரிக்கையாக உள்ளது.
இத்திட்டத்திற்காக நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். தா.பழூர் பகுதியை டெல்டா பாசன பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். தா.பழூர் பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும். முந்திரிக்கொட்டைகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
பொன்னேரியை ஆழபடுத்த வேண்டும் என்பதும், பொன்னேரிக்கு சுத்தமல்லி நீர்தேக்கத்திற்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து நீர் வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது. நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் துணிகளை வாங்க அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும், ஜவுளி பூங்கா உருவாக்க வேண்டும் என்றும் நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். சீரான மின் வினியோகம் கிடைக்க வழி செய்யவேண்டும் என்பதும், வேலை வாய்ப்புகளுக்கான தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.