2022-23ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றி அமைக்கப்படும் எனக் கூறினார். இந்நிலையில் இந்த திட்டம் ரத்து செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் வெறும் 46 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்கல்விக்கு செல்கின்றனர். இதற்கு அந்த மாணவிகளின் ஏழ்மையை காரணமாகும்.
எனவேதான் தாலிக்கு தங்கம் திட்டத்தை உயர் கல்வி உதவி திட்டமாக தமிழக அரசு மாற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் முறையில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உதவி திட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் இதனால் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள் என தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் கூறியுள்ளார்.