மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னையில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிட கட்டிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணி 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது நினைவிட பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. பொதுமக்கள் அனைவரும் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னை மெரினாவில் இன்று காலை முதல் குவியத்தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் நேற்று இரவு முதல் சென்னை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னைக்கு வரும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சரிசெய்து வருகின்றனர். மேலும், சென்னையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது சென்னை மெரினா கடற்கரை சாலை முழுவதும் தொண்டர்கள் குவிந்து காணப்படுகின்றனர். இந்த வீடியோக் காட்சிகள் தற்போது வைரலாகின்றன.